சென்னை புறநகர் பகுதிகளில் மசூதிகளை குறிவைத்து திருடும் மர்மநபர்


சென்னை புறநகர் பகுதிகளில் மசூதிகளை குறிவைத்து திருடும் மர்மநபர்
x
தினத்தந்தி 7 Aug 2018 3:17 AM IST (Updated: 7 Aug 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

மசூதிகளை குறிவைத்து திருடும் மர்மநபர், கிழக்கு தாம்பரத்தில் கைவரிசை காட்டியபோது கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு வரும் முஸ்லிம்களின் செல்போன், லேப்டாப் பைகளை திருடிச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த திருட்டுகளில் ஈடுபடும் மர்மநபர் யார்? என தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதியில் தொழுகைக்கு வருவது போல வந்த மர்மநபர் மசூதியின் 2-வது மாடிக்கு சென்று மசூதியின் இமாம் தங்கி இருந்த அறையின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிச் சென்றுவிட்டார்.

அவர் திருடச் செல்வது, திருடிக்கொண்டு தப்பிச் செல்வது ஆகிய அனைத்து காட்சிகளும் மசூதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த மர்மநபர் தொப்பி அணிந்து முஸ்லிம் போல தொழுகைக்கு வந்தது பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக மசூதி நிர்வாகிகள் சேலையூர் போலீசில் புகார் செய்தனர். சேலையூர் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவத்தை வைத்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story