அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் பிணமாக மீட்பு போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு


அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் பிணமாக மீட்பு போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Aug 2018 3:23 AM IST (Updated: 7 Aug 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு போலீசார்தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அடையாறு,

சென்னை பெசன்ட் நகர் அருணாசலபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 24). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு, அதில் மற்றொரு நண்பரை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக, பெசன்ட் நகரில் இருந்து அபிராமபுரம் நோக்கி சென்றார்.

அடையாறு திரு.வி.க. பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் ராதாகிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை பிடித்து வைத்து கொண்ட போலீசார் பெற்றோரை அழைத்து வரும்படி ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் திடீரென அவர் திரு.வி.க. பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்துவிட்டார். இதுபற்றி உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் ராதாகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் பணியை நிறுத்தினார்கள். நேற்று முன்தினம் முழுவதும் ரப்பர் படகு மூலம் மீண்டும் தேடும் பணியை தீவிரப்படுத்தினார்கள்.

ஆனாலும் தீயணைப்பு படையினரால் ராதாகிருஷ்ணனை மீட்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் நேற்று முன்தினம் இரவு தேடுதல் பணியை நிறுத்தினார்கள்.

நேற்று காலையும் அவரை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஆயத்தமானார்கள். அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் காலை 10.30 மணி அளவில் அடையாறு ஆற்றில் ராதாகிருஷ்ணன் உடல் மிதந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு இருந்த ராதாகிருஷ்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போக்குவரத்து போலீசார் துன்புறுத்தியதால்தான் ராதாகிருஷ்ணன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதற்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அங்கேயே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எனது மகன் சாவுக்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவனது உடலை வாங்க மாட்டோம் என ராதாகிருஷ்ணனின் பெற்றோர் தெரிவித்தனர்.

Next Story