தறிகெட்டு ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது; ஒரே குடும்பத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலி


தறிகெட்டு ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது; ஒரே குடும்பத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 7 Aug 2018 3:58 AM IST (Updated: 7 Aug 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

பிரியப்பட்டணா அருகே தறிகெட்டு ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். இவர்கள் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மைசூரு,

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி மஞ்சு (40). இந்த தம்பதிக்கு பூர்ணிமா (15) என்ற மகளும், நிகித் (12) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா லட்சுமிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று காரில் புறப்பட்டு சென்றார். காரை பழனிசாமியே ஓட்டிச் சென்றார். அவர்கள் சென்ற கார் பிரியப்பட்டணா அருகே கமரவள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

இந்த கிராமம் வழியாக ஹாரங்கி அணைக்கட்டின் பாசன கால்வாய் செல்கிறது. தற்போது அந்த கால்வாயில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் முழுவதும் தண்ணீர் நிரம்பி ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த நிலையில், கமரவள்ளி பகுதியில் கால்வாயை ஒட்டியபடி உள்ள சாலையில் பழனிசாமி காரை ஓட்டி வந்தார்.

அந்த சமயத்தில் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கால்வாய்க்குள் பாய்ந்தது. இதனால் காருக்குள் இருந்த 4 பேரும் காப்பாற்றும் படி கூச்சலிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெட்டதாபுரா போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிரேன் உதவியுடன், கால்வாய்க்குள் கிடந்த காரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பலியான 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பிரியப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி பெட்டதாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கால்வாய்க்குள் கார் பாய்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story