வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 10:45 PM GMT)

காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர், 


வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க வழங்கல் அதிகாரிகள், பறக்கும்படை தாசில்தார், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் உள்பட பல்வேறு அதிகாரிகள் முக்கிய ரெயில் நிலையங்கள் மற்றும் தமிழக-ஆந்திர எல்லை பகுதிகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனையின்போது வெளிமாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைத்திருக்கும் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் செல்வராஜ் (வேலூர்), செல்வராஜ் (நாட்டறம்பள்ளி) மற்றும் வருவாய்த்துறையினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, தாமலேரிமுத்தூர், சோமநாயக்கன்பட்டி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் நிலையம் மற்றும் எல்லை பகுதிகளில் வழங்கல் அதிகாரிகள் நடத்திய சோதனையில், வெளிமாநிலங்களுக்கு கடத்த மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அரிசி மூட்டைகளை வேலூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

Next Story