நடுவச்சேரி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


நடுவச்சேரி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:13 PM GMT (Updated: 6 Aug 2018 11:13 PM GMT)

அவினாசி அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நடுவச்சேரி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவினாசி,

அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவச்சேரி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. இங்கு ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு மின் மோட்டார்கள் பொறுத்தவில்லை. மேலும் இந்த கிராமத்திலுள்ள தெருவிளக்குகளில் பல தெருவிளக்குகள் எரிவதில்லை.

குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் நேரில் முறையிட்டும், கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன், ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

அங்கு அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் மோட்டார் பொருத்தவேண்டும். தெருவிளக்குகள் முழுவதையும் எரிய செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிளை செயலாளர் சுப்பிரமணி மற்றும் பழனிசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடனடியாக நடுவச்சேரிக்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து ஆழ்குழாய் கிணற்றுக்கு உடனடியாக மின்மோட்டார் பொருத்தப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பழுதடைந்த தெருவிளக்குகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story