சங்கரன்கோவில் அருகே தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
சங்கரன்கோவில் அருகே தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரத யாத்திரையை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
நெல்லை,
சங்கரன்கோவில் அருகே தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரத யாத்திரையை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
தூய்மை கணக்கெடுப்புநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷில்பா, ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளை மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மூலம் வருகிற 31–ந் தேதி வரை சுகாதார பணிகள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்தைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நேரடி ஆய்வு செய்யப்படுகிறது.
பொதுமக்களிடம் கருத்துபொதுமக்களிடம் சுகாதார நிலை குறித்து கருத்துகள் கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பஞ்சாயத்துக்கள் தரவரிசை செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக மாவட்ட அளவில் தரவரிசை செய்யப்படுகிறது.
பின்னர் மாநில அளவில் சுகாதார கிராமங்கள் தரவரிசை செய்யப்படும். சிறந்த மாநில மற்றும் மாவட்டங்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் 2–ந் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்எனவே தங்களது பஞ்சாயத்துகளில் உள்ள பொது இடங்கள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், வழிபாட்டு தலங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களை வீடு, வீடாக சென்று தகவல்கள் சேகரிக்க உள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணபதி, சுப்பிரமணியன், வட்டார ஒருங்கிணைப்பாளர் எட்வின்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.