கருணாநிதி மறைவையொட்டி கரூரில் கடைகள் அடைப்பு; அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் குவிப்பு


கருணாநிதி மறைவையொட்டி கரூரில் கடைகள் அடைப்பு; அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 PM GMT (Updated: 7 Aug 2018 7:31 PM GMT)

கருணாநிதி உடல்நலக் குறைவால் காலமானதையொட்டி கரூரில் கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண் காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக் குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

கரூர்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று மாலை காலமானார். இதையொட்டி கரூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில் கரூர் பஸ்நிலையம், ஜவகர்பஜார், கோவை ரோடு, திருக்காம்புலியூர் ரவுண்டானா, திருமாநிலையூர் ரவுண்டானா, புதிய அமராவதி பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே தி.மு.க.வினர் கருணாநிதியின் புகழ் ஓங்குக... என கோஷமிட்டபடியே முக்கிய வீதிகளில் வலம் வந்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மாலையிலேயே பூட்டப்பட்டன. இதனால் பரபரப்பாக காணப்படும் வீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்கள் ஆங்காங்கே தொலைக்காட்சியை பார்த்துவிட்டு அவர் காலமான செய்தியை கேட்டு கதறி அழுததையும் காண முடிந்தது. இதற்கிடையே கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே கரூர் முத்துராஜாபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் சரவணன்(வயது 50) திடீரென உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றி கொண்டு வந்து, கழக உடன் பிறப்புக்களை விட்டு விட்டு விண்ணிற்கு சென்று விட்டாயே தலைவா... என கோஷம் எழுப்பியபடியே வந்து திடீரென தீப்பெட்டியை உரசி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையறிந்த போலீசார் உடனே ஓடி வந்து சரவணனை மீட்டு கரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்குள்ள குழாயில் இருந்து தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் இது போன்ற தகாத செயலில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரம் செல்ல செல்ல கரூர் பஸ் நிலையத்தினுள் தனியார் பஸ்களின் இயக்கம் இரவு 8 மணியளவில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றன. அதுவும் 9 மணியளவில் அனைத்து பஸ்களும் கரூர், குளித்தலை பணிமனைகளுக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன. இதனால் சில பயணிகள் ஆட்டோ உள்ளிட்டவற்றில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். மேலும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றில் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்வதற்காக வாகனங்கள் அதிகளவில் வந்ததால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தகராறு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் ஆங்காங்கே ரோந்து சென்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் தான் அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் நினைவாக குளித்தலை தொகுதி தி.மு.க.வினர் ஆங்காங்கே தி.மு.க. கொடியை அரைகம்பத்தில் பறக்க விட்டு அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விளம்பர பதாகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. மேலும் கரூர் வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் வசித்து வரும் தி.மு.க. ஆதரவு கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி தினத்தில் எங்களது கையை விட்டு சென்று விட்டாயே தலைவா... என இரங்கல் தெரிவித்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.

இதே போல் நொய்யல், அரவக்குறிச்சி, வெள்ளியணை, தென்னிலை, க.பரமத்தி, உப்பிடமங்கலம், புலியூர், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், வாங்கல் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Next Story