ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலை அருகே அரசமரத்திலுள்ள கதண்டு கூடுகளால் பொதுமக்கள் அச்சம்


ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலை அருகே அரசமரத்திலுள்ள கதண்டு கூடுகளால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 8 Aug 2018 4:00 AM IST (Updated: 8 Aug 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலை அருகே அரச மரத்திலுள்ள கதண்டு கூடுகளால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலை பின்புறம் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே மிகவும் பழமை வாய்ந்த சுமார் 75 ஆண்டுகால அரசமரம் ஒன்று உள்ளது. இம்மரத்தில் 3 இடங்களில் மிகப்பெரிய அளவில் கதண்டுகள் கூடுகட்டி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கதண்டு கூடுகள் எப்போது வேண்டுமானாலும் கலையும் சூழலில் உள்ளது. அவ்வாறு அது கலைந்தால் அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் குழந்தைகள் கோவில் அருகிலும், கோவிலுக்கு உள்ளேயேயும் விளையாடி வருகின்றனர். இதனால் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.

இதுதொடர்பக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொது மக்களையும், சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே தண்ணீர் தொட்டி ஒன்றில் கதண்டு கூடு கட்டி இருந்தது. அதன் அருகே மளிகை கடையில் பெண் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை கதண்டு கடித்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அங்கு சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக இறந்தார். இறந்து போன பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story