மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்


மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Aug 2018 4:15 AM IST (Updated: 8 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி கரூரில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

கரூர்,

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவானது, 80 சதவீத வாகன விபத்துக்களுக்கு ஓட்டுனர்களே காரணம் என கூறுகிறது. மேலும் ஓட்டுனர்களை மட்டுமே விபத்துக்களுக்கு பொறுப்பாக்கி ஆயிரக்கணக்கில் அபராதம் விதிப்பது, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது, சிறை தண்டனை என குற்றவாளிகளை போல் பாவித்து தண்டனை வழங்குவதே இந்த மசோதாவின் நோக்கமாக இருக்கிறது. மேலும் வாகன உற்பத்தி நிறுவனங்களே ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என இந்த மசோதா கூறுவதால் உதிரிபாகங்கள் விற்பனை செய்வோர், வாகனப் பழுது நீக்குவோர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துவோர் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கூறி இந்த மசோதாவினை திரும்பப்பெறக்கோரி அரசுபோக்குவரத்து, ஆட்டோ, சரக்கு வாகனங்கள், உதிரிபாக விற்பனையாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆகஸ்டு 7-ல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அந்த வகையில் நேற்று கரூரில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது சரக்கு ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி பணிமனைகளில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை. எனினும் மெக்கானிக் கடைகள், வாகன உதிரிபாக கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் திடீரென பழுதாகி நின்ற தங்களது வாகனங்களை உடனடியாக பழுது பார்த்து இயக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்ட தொழிற்சங்கத்தினர் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் அப்பாசாமி தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் அம்பலவாணன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மேலும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உள்பட தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story