தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைக்கப்பட்டன


தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைக்கப்பட்டன
x
தினத்தந்தி 8 Aug 2018 4:30 AM IST (Updated: 8 Aug 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று மாலை முதல் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடாததால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 6.10 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் தஞ்சையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படவில்லை.

இதேபோல் தஞ்சை நகருக்குள் இயக்கப்பட்ட பஸ்களும் பயணிகளை பஸ் நிலையங்களில் இறக்கி விட்டு விட்டு போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். மற்ற ரெயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப் பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெங்களூரு, சென்னை, நாகர்கோவில், கேரள மாநிலம் எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து மட்டும் 40 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று இயக்கப்படவில்லை. இது குறித்து அனைத்து பஸ்களின் உரிமையாளர்களுக்கும், முன்பதிவு செய்யும் ஏஜென்சியினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்பதிவு செய்வதும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

தஞ்சை பழைய பஸ் நிலையம், காந்திஜி சாலை, பர்மா பஜார், ரெயிலடி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கருணாநிதி மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் திருவாரூர் நகரமே சோகத்தில் மூழ்கியது. திருவாரூரில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்கள் இயக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் பரபரப்பாக காணப்படும் காய்கறி மார்க்கெட், நகைக்கடை சந்து அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

அரசு பஸ்கள் அனைத்தும் திருவாரூர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர். பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 6 மணிக்கு மூடப்பட்டன. இதேபோல திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். பஸ்கள் இயக்கப்படாததால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாகை மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர். தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 

Next Story