பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க உதவித்தொகை


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க உதவித்தொகை
x
தினத்தந்தி 7 Aug 2018 10:00 PM GMT (Updated: 7 Aug 2018 8:32 PM GMT)

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தபால்தலை சேகரிப்பை ஊக்குவிப்பதற்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தேனி,


இதுகுறித்து தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தபால்தலைகள் சேகரிப்பை ஊக்குவிப்பதற்கான உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதன்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறலாம்.

தபால் தலை சேகரிப்பதற்கான குழுமத்தில் உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு தபால் நிலையத்தில் வைத்திருப்பவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க உள்ள மாணவ, மாணவிகள் தங்களின் முந்தைய பள்ளி வகுப்பு தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள தபால் நிலையங்களிலோ, அல்லது tam-i-l-n-a-du-post.nic.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மதுரை மண்டல தபால் துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு வருகிற 26-ந்தேதி தேனி தபால் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் தபால் தலை சேகரிப்பு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை மத்திய அரசு வழங்க உள்ளது. மேலும் தகவலுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story