மாவட்ட செய்திகள்

கருணாநிதி மரணம்: கோவை நகரம் முழுவதும் 1,000 போலீஸ் குவிப்பு + "||" + Karunanidhi's death: Coimbatore city has 1,000 police concentrations

கருணாநிதி மரணம்: கோவை நகரம் முழுவதும் 1,000 போலீஸ் குவிப்பு

கருணாநிதி மரணம்: கோவை நகரம் முழுவதும் 1,000 போலீஸ் குவிப்பு
கருணாநிதி மரணத்தை தொடர்ந்து, கோவையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது.

கோவை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து கோவை நகரில் தி.மு.க.வினர் பல இடங்களில் துக்கம் கடைபிடித்தனர். கோவை நகரம் முழுவதும் 1,000 போலீசார், 20 உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் நகரம் முழுவதும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பொது இடங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவையில் இருந்து சென்னை, உள்ளிட்ட வெளியூர்களுக்கு தினமும் இயக்கப்படும் 300 ஆம்னி பஸ்கள் மாலை முதல் நிறுத்தப்பட்டன. விரைவு பஸ்களும் நிறுத்தப்பட்டதால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதியடைந்தனர். எனவே கோவை ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏராளமானவர்கள் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து வாளையார் புதுபதிக்கு 96–ம் எண் அரசு பஸ் சென்றது. குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே சென்றபோது, பஸ்மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பஸ் நிறுத்தப்பட்டு டெப்போவுக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இறங்கி வேறு வாகனங்களில் சொந்த இடங்களுக்கு சென்றனர். பஸ்மீது கல்வீசியவர்கள் குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டம் முழுவதும் 252 டாஸ்மாக் கடைகள் நேற்று மாலை முதல் அடைக்கப்பட்டன. பார்களும் மூடப்பட்டன. கோவையில் நேற்று இரவு 8 மணிமுதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் தாராபுரம், திருப்பூர், பழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். தாராபுரம் செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் ஏறி உட்கார்ந்து இருந்தனர். அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் டிரைவர் பஸ் ஓடாது என்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினார்கள். அதற்குள் நல்லவேளையாக தனியார் பஸ் வந்ததால் அதில் ஏறி சென்றனர். மேலும் கருணாநிதி மரணம் குறித்த செய்தியை அறிந்ததும் பொள்ளாச்சியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகளை அவர்களே முன்வந்து அடைத்தனர். பொள்ளாச்சியில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.