மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு-பஸ்கள் இயக்கப்படவில்லை + "||" + Shops in the Kumari district are not operated by the Karunanidhi cemetery

கருணாநிதி மறைவை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு-பஸ்கள் இயக்கப்படவில்லை

கருணாநிதி மறைவை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு-பஸ்கள் இயக்கப்படவில்லை
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்படாததால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைகள் பலன் அளிக்காமல் நேற்று மாலை மரணம் அடைந்தார். கருணாநிதி மரணம் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.வினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.


இதே போல குமரி மாவட்டத்திலும் சோகம் உருவானது. இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குமரி மாவட்டத்தில் நேற்று மாலை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குழித்துறை, குளச்சல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் கடைகளை, அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து அடைத்தனர்.

நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் மட்டும் சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அதுபோக மற்ற இடங்களில் அனைத்து கடைகளும் இரவு 7 மணிக்கு பிறகு மூடப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் நகரின் முக்கிய இடங்களான மணிமேடை, பாலமோர் ரோடு, கேப் ரோடு, கே.பி.ரோடு, செட்டிகுளம் மற்றும் கலெக்டர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன.

இதே போல குமரி மாவட்டத்தில் உள்ள சினிமா திரையரங்குகளிலும் நேற்று மாலை காட்சியும், இரவு காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

மேலும் மாலை 6 மணிக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் அவசர அவசரமாக மூடப்பட்டன.

நாகர்கோவிலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் நேற்று மாலைக்கு பிறகு ஆம்னி பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. அனைத்து ஆம்னி பஸ்களும் வடசேரியில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ஆம்னி பஸ்களில் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்களால் செல்ல இயலாமல் போனது. அவர்கள் ஆம்னி பஸ் நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்து தங்களது வீட்டுக்கு சென்றனர். மேலும் சிலர் ரெயில்களில் புறப்பட்டனர்.

அதோடு அரசு பஸ்கள் போக்குவரத்தும் மாலைக்கு பிறகு படிப்படியாக குறைந்தது. கருணாநிதி இறந்ததாக அறிவிப்பு வெளியான 30 நிமிடங்கள் வரை வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் வேக வேகமாக புறப்பட்டன. தொடர்ந்து அந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. பின்னர் 7.30 மணிக்கு பிறகு சென்னை, கோவை, திருச்சி, சேலம், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இயக்கப்பட வேண்டிய பஸ்களும் ஓடவில்லை. அவை அனைத்தும் வடசேரி பஸ் நிலையத்தில் வரிசையாக நின்றன. அதன் பிறகு ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளுக்கு கொண்டு வரப்பட்டன.

ஆனால் மதுரை பணிமனையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் அனைத்தும் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டது. அந்த வகையில் புறப்பட்ட சில பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். எப்படியாவது ஊருக்கு சென்றால் போதும் என்ற நிலையில் படிகளில் தொங்கியபடியும் பயணம் செய்தனர். எனினும் வடசேரி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் குறையவில்லை. நெல்லை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் வேலை காரணமாக நாகர்கோவில் வருவதுண்டு.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செல்லும் பஸ்கள் ஓடாததால் இவர்கள் அனைவரும் ரெயில் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது. பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறி பயணம் செய்தனர்.

ஆனால் குமரி மாவட்டத்துக்குள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் இரவு 9 மணி வரை வழக்கம் போல இயக்கப்பட்டன. அதற்கு பிறகு பஸ் போக்குவரத்து மெல்ல மெல்ல குறைந்தது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஒரு சில பஸ்கள் மட்டுமே சென்றன. பஸ்கள் இயக்கம் குறைந்ததால் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களில் மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். நேற்று மாலைக்கு பிறகு ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களின் ஓட்டம் அதிகமாக காணப்பட்டது.

கருணாநிதி மரணம் அடைந்ததால் அதிருப்தியில் யாரேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டுவிடாமல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பிறப்பித்தார். அதன்படி சுமார் 1,500 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வெளி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பஸ் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.