மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: வேன்-கார்- ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்


மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: வேன்-கார்- ஆட்டோக்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 9:22 PM GMT)

மோட்டார்வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் வேன், கார், ஆட்டோக்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார்வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், அனைத்து தொழிற்சங்கத்தினர் 1 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம், அனைத்து மோட்டார் தொழிற்சங்க கூட்டமைப்பு, போக்குவரத்து துறை ஆலோசகர் சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்களும் பங்கேற்றன.

இதனால் தஞ்சையில் வேன், கார், ஆட்டோக்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராசாமிராசுதார் மருத்துவமனை சாலை, மருத்துவகல்லூரி அருகே உள்ளிட்ட பகுதிகளில் கார், வேன்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல்ஓடின. அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் 83 பேரை தவிர 1,068 பேர் நேற்று வழக்கம் போல பணிக்கு வந்திருந்தனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள், வேன், கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம், பேரணியிலும் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் 2 இடங்களிலும், கும்பகோணத்தில் 2 இடங்களிலும் என மொத்தம் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரணிக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். பேரணி ராசாமிராசுதார் மருத்துவமனை, அண்ணாசிலை வழியாக பனகல் கட்டிடத்தை அடைந்தது.

இதில் தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சங்கிலிமுருகன், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தை சேர்ந்த அறிவழகன், இருசக்கர, 4 சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்த துரைராஜ், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த பாஸ்கரன், கோகுலகிருஷ்ணன், துரைப்பாண்டியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். இதில் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த மோகன்ராஜ், தொ.மு.ச.வை சேர்ந்த சேவியர், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த மூர்த்தி, அம்மா மக்கள் முன்னேற்றகழக ஆட்டோ சங்கம் குமரேசன், தே.மு.தி.க. ஆட்டோ சங்கம் நாகராஜ், ராஜீவ்காந்தி ஆட்டோ சங்கம் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி வசூலை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story