தறிகெட்டு ஓடிய ஆம்னி பஸ் மின்கம்பத்தில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது
உளுந்தூர்பேட்டை அருகே தறிகெட்டு ஓடிய ஆம்னி பஸ் சாலையோர மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் நள்ளிரவு 1.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியபடி சாலையோரமுள்ள ஒரு உயரழுத்த மின் கம்பத்தில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த பஸ் பயணிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபயகுரல் எழுப்பினார்கள். இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த பிரபாகரன்(45), முத்துக்குமார்(50), சென்னை கிருத்திகா(24), லட்சுமிபிரியா(23), பாலுசாமி(52), நெல்லை கணேசமூர்த்தி உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். லேசான காயமடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் படுகாயமடைந்த 20 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆம்னி பஸ் மின்கம்பத்தில் மோதியவுடன் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story