விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.4½ கோடி மதிப்பு நவீன ஸ்கேன் எந்திரம் கார் ஷெட்டில் வைக்கப்பட்டுள்ள நிலை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.4½ மதிப்பிலான நவீன ஸ்கேன் எந்திரம் கார் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆஸ்பத்திரி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக முதல்–அமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது விருதுநகரில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.4½ கோடி மதிப்புள்ள நவீன ஸ்கேன் எந்திரத்தை ஒதுக்கீடு செய்தது. இது பற்றி தகவல் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் லாரிகளில் கொண்டு வரப்பட்ட அந்த ஸ்கேன் எந்திரத்தை இறக்கி வைப்பதற்கே உரிய ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் 2 நாட்கள் லாரிகளிலேயே அந்த எந்திரம் இருந்த பின்னர் தான் ஆஸ்பத்திரி வளாகத்தில் இறக்கி வகைக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த வருடம் ரூ.1¼ கோடி மதிப்புள்ள சிடி ஸ்கேன் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அது பல மாதங்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கார் நிறுத்தும் இடத்திலேயே வைக்கப்பட்டு இருந்து. தட்பவெப்ப நிலையால் எந்திரத்தின் செயல்பாடு பாதிப்பு அடைந்து விடும் என்று பல முறை சுட்டிகாட்டிய பின்னரும் ஆஸ்பத்திரி நிர்வாகம் மின் இணைப்பு கிடைக்க வில்லை என கூறி காலம் தாழ்த்தி வந்தது. இது பற்றி மின்வாரிய மேற்பார்வை என்ஜினீயரிடம் தினத்தந்தி எடுத்துக்கூறி மின் இணைப்பு வழங்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்ட பின்னர் மின் வாரிய அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையால் மின் இணைப்பு வழங்கப்பட்டு அந்த எந்திரம் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போதும் மருத்துவ சேவை கழகம் ரூ.4½ கோடி மதிப்புள்ள அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக முன்கூட்டியே தெரிவித்து இருந்தும் அந்த எந்திரத்தை நிறுவி பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்காமல் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் கார் நிறுத்தும் இடத்தில் எந்திரத்தை வைத்து விட்டு எந்திரத்தை நிறுவதற்கான இடத்தில் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏழை–எளிய மக்களுக்கு அதிநவீன மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த எந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்கை கடைபிடிக்கும் நிலை இருந்து வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தை மக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர ஆஸ்பத்திரி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. மின் வாரிய அதிகாரிகளும் எந்திரம் செயல்பாட்டிற்கு வருவதற்கு அவர்களது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதை உடனடியாக செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.