சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: ரூ.1 கோடியே 6 லட்சம் தங்க நகைகள் மீட்பு


சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: ரூ.1 கோடியே 6 லட்சம் தங்க நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 9:41 PM GMT (Updated: 7 Aug 2018 9:41 PM GMT)

தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபரிடம் இருந்து ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் தெரிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

பெங்களூரு மேற்கு மற்றும் வடக்கு மண்டல போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக அச்சுத் குமார் கனி என்கிற விஸ்வநாத் கோலிவாட்(வயது 31) என்பவரை கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி ஞானபாரதி பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கோலிவாட் கிராமத்தை சேர்ந்த அச்சுத் குமார் பெங்களூரு கும்பலகோடு அருகே உள்ள கனிமினிகே கிராமத்தில் தங்கி தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவரிடம் விசாரித்தபோது அவர் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அச்சுத்குமாருக்கு, அவருடைய மனைவி மகாதேவி உடந்தையாக இருந்துள்ளார். பெரும்பாலும் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணித்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அச்சுத்குமார் சில தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களை கதக் மாவட்டத்தை சேர்ந்த அவருடைய நண்பர் சிவு ஹிரேமட்டுடன் சேர்ந்து செய்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் நகைகளை அச்சுத்குமார் தனது நண்பர் கவிசித்தேஷ் என்பவரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு அச்சுத்குமார் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். சூதாட்டத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளதோடு, புதிதாக மோட்டார் சைக்கிள்களையும் அவர் வாங்கியுள்ளார். தலைமறைவாக உள்ள அச்சுத்குமாரின் மனைவி மகாதேவி, நண்பர் சிவு ஹிரேமட் ஆகியோரை தேடிவருகிறோம்.

அச்சுத்குமார் 2009-ம் ஆண்டு முதல் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளார். தார்வார், ஹாவேரி, உத்தர கன்னடா மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் தலைமறைவானார். இதனால் அச்சுத்குமாருக்கு எதிராக 18 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. போலீசாரால் தேடப்படும் நபராக இருந்த அச்சுத்குமார் பெங்களூரு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

அவர் கைதாகி இருப்பதன் மூலம் பெங்களூரு நகரில் பதிவாகி இருந்த 77 தங்க சங்கிலி பறிப்பு வழக்குகள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 105 தங்க சங்கிலி பறிப்பு வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது. இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 3½ கிலோ எடை கொண்ட தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டு உள்ளன.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 6 லட்சம் ஆகும். இதுதவிர 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.”

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அச்சுத்குமாரிடம் இருந்து மீட்கப்பட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட தங்க நகைகளை போலீஸ் கமிஷனர் சுனில் குமார், மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.கே.சிங் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story