மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்–ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்–ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:30 PM GMT (Updated: 7 Aug 2018 9:52 PM GMT)

மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மற்றும் காரைக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தம் செய்வதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சி.ஐ.டி.யூ. உள்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 4 கோடி மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதை எதிர்த்து நேற்று மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனையொட்டி ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வீரய்யா, ஓட்டுனர் பயிற்சி பள்ளி கூட்டமைப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் உமாநாத், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சசிவர்ணம், பொதுச் செயலாளர் விஜயகுமார், எல்.பி.எப். பொறுப்பாளர்கள் திருநாவுக்கரசு, ராஜாங்கம், சஞ்சய்காந்தி, குமரபிரசாத், நாகராஜ், அலாவூதின், மண்டல பொருளாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காரைக்குடியிலும் தனியார் வேன், கார், ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் தட்சிணாமூர்த்தி, இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்குவோர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாக வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story