ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் திருநங்கை காவலராக நஸ்ரியா பணி ஏற்பு


ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் திருநங்கை காவலராக நஸ்ரியா பணி ஏற்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 PM GMT (Updated: 7 Aug 2018 10:01 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் திருநங்கை காவலராக நஸ்ரியா நேற்று பணி ஏற்றுக்கொண்டார். பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தனது விடாமுயற்சியால் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் நஸ்ரியா (வயது 22). திருநங்கையான இவர் கடந்த ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டார். அப்போது திருநங்கைக்கான சான்றிதழ் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார்.

அதைதொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து திருநங்கைக்கான சான்றிதழ் பெற்றார். பின்னர் நடைபெற்ற உடல்தகுதி தேர்வின் போது முதல் கட்ட தேர்வில் கலந்து கொள்ளாததால் அனுமதிக்க முடியாது என்று நஸ்ரியாவிற்கு அடுத்த முட்டுக்கட்டை ஏற்பட்டது. மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது அரசு சார்பில் வழங்கப்பட்ட நல வாரிய அடையாள அட்டை இருந்தால் அனுமதிப்பதாக தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் உடனடியாக நஸ்ரியாவிற்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கியதை தொடர்ந்து அதன்அடிப்படையில் உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டார். தொடர்ந்து தனக்கு வந்த தடைகளை தகர்த்தெறிந்து சிறப்பு அனுமதியுடன் நடைபெற்ற உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அதன்படி சீருடை பணியாளர் தேர்வாணைய நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நஸ்ரியா காவலராக தேர்வு செய்யப்பட்டார். தனது இடைவிடாத முயற்சியால் காவலராக தேர்ச்சி பெற்ற நஸ்ரியா காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மற்றும் செயல்முறை பயிற்சிக்கு பின்னர் தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்திலேயே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பயிற்சிக்கு பின்னர் பணி ஒதுக்கீடு பெற்ற நஸ்ரியா, நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி நியமன ஆணையை வழங்கி, ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்து தனது காவல் பணியை தொடங்கினார்.

இதுகுறித்து திருநங்கை நஸ்ரியா கூறியதாவது:– நீண்ட போராட்டத்திற்கு பின்னர் திருநங்கையான நான் காவலராக தேர்வு செய்யப்பட்டு முதலில் திருச்சி காவலர் பயிற்சி பள்ளியிலும், பின்னர் மதுரை பயிற்சி பள்ளியிலும் பயிற்சி பெற்றேன். பின்னர் சிவகங்கை நகர் காவல் நிலையத்திலும், தொடர்ந்து சிவகங்கை ஆயுதப்படையிலும் செயல்முறை பயிற்சி பெற்றேன்.

பயிற்சியின் முடிவில் மாநில அளவில் 1,315 தரவரிசை பெற்றதோடு 500க்கு 421.33 மதிப்பெண்கள் பெற்றதால் தன்விருப்ப அடிப்படையில் ராமநாதபுரத்திலேயே பணியாற்ற வாய்ப்பு பெற்றுள்ளேன். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட காவல் நிர்வாகத்தில் பணி ஆணை வழங்கி ஆயுதப்படையில் பணியில் சேர்ந்துள்ளேன். எனக்கு ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உடனடியாக வீடு வழங்கி உள்ளனர். எனது இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறேன். தொடர்ந்து நான் குரூப்–1 தேர்வு எழுத பயிற்சி பெற உள்ளேன்.

திருநங்கைகளுக்கு தற்போது சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. திருநங்கைகள் நன்கு படித்தால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். இதுவரை என்னை மரியாதை குறைவாக அழைத்தவர்கள் காவலர் உடை அணிந்ததும் மரியாதையாக அழைக்கின்றனர். இதற்கு எனது முயற்சியும், கல்வியும்தான் காரணம். திருநங்கையான எனது வெற்றிக்கு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆதரவுதான் முக்கிய காரணமாக அமைந்தது.

திருநங்கையாக மாறுபவர்களுக்கு பெற்றோர்கள் கைவிடாமல் அங்கீகரித்து ஆதரவு அளிக்க வேண்டும். அதுபோன்ற ஆதரவுகள் கிடைக்காதபோதுதான் திருநங்கைகள் வேறுபாதைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, பெற்றோர்கள் ஆதரவளிக்க வேண்டும். திருநங்கையான எனக்கு சொந்த மாவட்டத்திலேயே காவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து சீருடை அணிந்து செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டில் முதல்முறையாக தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டராக சேலத்தை சேர்ந்த பிரித்திகாயாசினி பதவி ஏற்ற நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நஸ்ரியா காவலராக பணியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story