வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை, நம்புதாளை மீனவர்கள் மனு


வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை, நம்புதாளை மீனவர்கள் மனு
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 PM GMT (Updated: 7 Aug 2018 10:01 PM GMT)

வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்புதாளை பகுதி மீனவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

நம்புதாளை பகுதியை சேர்ந்த ஊர் முக்கிய பிரமுகர்கள், மீனவர்கள் என எராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– திருவாடானை தாலுகா நம்புதாளை பகுதியை சேர்ந்த நாங்கள் ஆண்டாண்டு காலமாக பைபர் படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த 5–ந்தேதி எங்கள் ஊரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான படகில் நம்புதாளையை சேர்ந்த 4 பேர் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அந்த பகுதியில் 2 பைபர் படகில் வந்த நபர்கள் வெடிகுண்டு வீசி மீன்பிடித்து செல்ல முயன்றனர். இதனை கண்ட எங்கள் பகுதி மீனவர்கள் அதனை கண்டிக்கும் விதமாக செல்போனில் படம்பிடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் படகில் வந்து செல்போன்களை பறித்து கடலில் வீசியதோடு, கட்டைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

அவர்கள் தொண்டி புதுக்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்று சட்டவிரோதமாக கடலில் வெடிகுண்டுவீசி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதோடு, தற்போது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவதோடு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒம்பிரகாஷ்மீனா இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story