மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவு: புதுச்சேரி தலைவர்கள் இரங்கல் + "||" + Karunanidhi's death: Puducherry leaders Mourning

கருணாநிதி மறைவு: புதுச்சேரி தலைவர்கள் இரங்கல்

கருணாநிதி மறைவு: புதுச்சேரி தலைவர்கள் இரங்கல்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு உலகத்தமிழர்களுக்கே பேரிழப்பாகும் என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி,

புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, சிறந்த இலக்கியவாதியாக தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் காவலராக விளங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயரம் அடைந்தேன். கருணாநிதி தனக்கு வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர். கருணாநிதி ஒருவர் தான் நேரு முதல் தற்போதைய பிரதமர் மோடி காலத்து வரை அரசியலில் பணியாற்றியவர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் அவரைப்போல் யாரும் பணியாற்றி இருக்கவில்லை.


டாக்டர் கருணாநிதியின் இழப்பு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத்தமிழர்களுக்கே பேரிழப்பாகும். அவரது பிரிவை யாராலும் ஈடு செய்ய முடியாது. இந்த நேரத்தில் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தி.மு.க.கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்து இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதுவை காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, பார்போற்றும் பண்பாளராக சிறந்த இலக்கியவாதியாக தமிழ் மொழியின் காவலராக விளங்கிய இணையற்ற தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு தமிழ் சமுதாயமே மீளா துயரில் ஆழ்ந்துள்ளது.

பெரியார், அண்ணா ஆகியோரின் சீரிய கொள்கைகளை நெஞ்சிலே தாங்கி இளமை பருவம் முதலே சீர்திருத்த கருத்துகளை திக்கெல்லாம் பரப்ப தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட தனிப்பெரும் தலைவர் கருணாநிதியின் மாசற்ற மக்கள் தொண்டு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும், இந்திய திருநாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மாபெரும் தலைவரை, தன் அன்பு தந்தையை இழந்து தவிக்கும் திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் மறவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் முதுபெரும் தலைவரும், தமிழகத்தின் தனிப்பெரும் தலைவரும், தி.மு.க. வழித்தோன்றலாக விளங்கிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுடைய மறைவு செய்தி கேட்டு துயருற்றோம். அவரின் மறைவு அனைவருக்கும் பெரும் துயரத்தை அளிக்கிறது.

கருணாநிதியின் மறைவு இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரால் கட்டி காத்து வந்த தி.மு.க.விற்கும், இயக்க தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கருணாநிதியின் மறைவினால் வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்திற்கும் எங்களது அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்தியில் ரங்கசாமி கூறியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் எம்.பி.வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழினத்தின் தன்மான உணர்வினை தட்டியெழுப்பும் போராட்டங்களை சிறு வயது முதல் தலைமை தாங்கி நடத்தி அறிஞர் அண்ணாவின் வழியில் தமிழகத்தின் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. தனது வியத்தகு ஆற்றலால் வெற்றிகரமான பல சாதனைகளை செய்தவர்.

பெண்கள் இடஒதுக்கீடு, திருநங்கைகள் வாழ்வில் மேம்பாடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி என தனது வாழ்நாளில் குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினருக்கும், தி.மு.க. முன்னணி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலக தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவர், உலக வரலாற்றில் ஒரு பெரும் அரசியல் இயக்கத்திற்கு 50 ஆண்டுகள் தலைமை ஏற்றவர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்த ஒப்பற்றத் தலைவர், அரசியல் அரங்கு, இலக்கியத்தளம், கலைத்துறை இவைகளில் சிறந்து விளங்கிய மேதை, நமது இதயமெல்லாம் நிறைந்த முத்தமிழ் அறிஞர், தலைவர் கருணாநிதி. அவரது மறைவு தமிழ் இனத்திற்கும், தமிழ் மாநிலத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அந்த ஒப்பற்ற தலைவருக்கு புதுச்சேரி மாநில தி.மு.க. தமது இதயம் கனிந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறது.

இந்திய நாடே அவரது இழப்பிற்கு கண்ணீர் சிந்துகிறது.கழகத்தின் எதிர்காலமே அவர்தான் என்ற நிலையில் நம்மையெல்லாம் அவர் இன்று ஆழ்ந்த துக்கத்தில் விட்டுச்சென்றுவிட்டார். கண்ணீரோடு கலங்கிநிற்கும் நாம் என்றும் அவர் புகழ்பாடுவோம். அவர் வழி நிற்போம்.

புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க.வின் கொடிகளை அறைக்கம்பத்தில் பறக்கவிட்டு நம்முடைய இரங்கலை வெளிக்காட்டுவோம். தலைவரின் பூதஉடல் வைக்கப்பட்டிருக்கும் சென்னை ராஜாஜி அரங்கில் பெருந்திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்துவோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகத்தின் ஒட்டுமொத்த துயரமும் எங்கள் நெஞ்சில் இடியாய் இறங்கியுள்ளது. நாங்கள் சிறுவயது முதல் பார்த்து பார்த்து கேட்டுகேட்டு ரசித்து போற்றிய எங்கள் பாசத்துக்குரிய, நேசத்துக்குரிய அந்த கம்பீர கலைஞர் இன்று எங்களுடன் இல்லை. எங்களுக்கு இத்தனை நாள் தாயாய், தந்தையாய், அறிவாய் இருந்தார். எங்களின் மானம் காக்கின்ற ஆடையாக கூட இருந்தார். அவர் எங்களை தெரிந்து வைத்திருந்ததும், நாங்கள் அவரை அறிந்து வைத்திருந்ததும் ஒரு வரலாறு.

ஆனால் நாங்கள் மட்டும் இங்கே அம்மாவும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல் பரிதவித்து கதறி அழுது அழுது உறங்கி போகின்ற பிள்ளைகளாக மாறி போனோம். உன் பாதங்களில் எங்கள் அன்பு முத்தங்கள் ஆயிரத்தையும் பதித்து அனுப்புகிறோம்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.

காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இறவா புகழ்பெற்ற என் தமிழ், என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து உங்களை நான் காப்பேன் என்ற சொன்ன தலைவர், இன்று நம்மிடையே இல்லை. தலைவர் இறப்பால்

லட்சோப லட்ச தொண்டர்கள் ஒட்டுமொத்தமாய் கண்ணீர் கடலில் மிதக்கிறோம்.

கலைஞரை நேசிக்காதவர்கள் கூட, அவரது மரணம் யோசிக்க வைத்துள்ளது. இவ்வேளையில், கலைஞர் இல்லா தி.மு.க. என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்று மேற்கே மறைந்த சூரியன், நாளை கிழக்கே மீண்டும் உதிக்கும் தளபதியாய்! எனவே, இந்த இயக்கத்தை கட்டிக்காக்க, தளபதி அவர்கள் தலைமையில் கழகத்தை காக்க, சத்தியம் கூறுவோம். கலைஞர் இன்று இல்லை என்றாலும், அவர் உருவாக்கிய கழகத்தையும், தொண்டர்களையும் கண்களை இமைகள் காப்பது போல் காப்போம்.

இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதே போல் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, புதுவை மாநில விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்க தலைவர் கதிரொளி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.