வேலைநிறுத்த போராட்டத்தின்போது போக்குவரத்து தொழிலாளர்கள் சாலைமறியல்
புதுவையில் வேலைநிறுத்த போராட்டத்தின்போது போக்குவரத்து தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
சாலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தனியார் பஸ்கள் ஏதும் ஓடவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு பஸ்கள் மட்டும் சில இயக்கப்பட்டன.
இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பழைய பஸ் நிலையம் அருகே கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக புதிய பஸ்நிலையம் நோக்கி புறப்பட்டனர்.
இந்த ஊர்வலத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, ஐ.என்.டி.யு.சி. குமார், முத்துராமன், சி.ஐ.டி.யு. சீனுவாசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க அண்ணா அடைக்கலம், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க செந்தில் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது தொழிற்சங்கத்தினர் பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது 530 பேர் கைதானார்கள். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிதுநேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் போக்குவரத்து தொழிலாளர்கள் தியாகராஜன், மணிபாலன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 20 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் வில்லியனூர் காவல்நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.