போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: புதுச்சேரியில் பஸ்கள் ஓடவில்லை


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: புதுச்சேரியில் பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 7 Aug 2018 11:30 PM GMT (Updated: 7 Aug 2018 10:22 PM GMT)

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

புதுச்சேரி,

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. புதுவை மற்றும் தமிழக அரசு பஸ்கள் சில ஓடின. அந்த பஸ்களும் சென்னை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டன. பெருமளவு பஸ்கள் இயக்கப்படாததால் புதுவை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுவையில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. புதுவையின் போக்குவரத்தில் தனியார் பஸ்களே அதிக அளவில் பங்களிப்பு செய்து வருகின்றன. இந்த பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 2 சக்கர வாகனங்களில் வேலைக்கு சென்று வந்தனர். வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதால் பெரும்பாலான ஆட்டோ, டெம்போக்களும் ஓடவில்லை.

மேலும் இருசக்கர வாகன பழுது பார்ப்போர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைக்காரர்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்து இருந்தனர். தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயக்கப்படாது என்று முன்பே அறிவிக்கப்பட்டதால் புதுவையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டும் இயங்கின. அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பெற்றோரே இருசக்கர வாகனங்களில் அழைத்துச் சென்று வந்தனர். மாலை 6 மணிக்கு இந்த வேலைநிறுத்த போராட்டம் நிறைவடைந்தது.

அதைத்தொடர்ந்து தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

வேலைநிறுத்தத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காத வண்ணம் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வாகனங்களில் அடிக்கடி ரோந்து சுற்றி வந்தனர்.


Next Story