மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + A young woman committed suicide near Vriddhachalam

விருத்தாசலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

விருத்தாசலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
விருத்தாசலம் அருகே இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வேப்பூர்,


விருத்தாசலம் அருகே உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 31). இவர் சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா(25). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சங்கீதா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சங்கீதாவின் அண்ணன் தேசிங்குராஜ் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சங்கீதாவின் மாமியார் வெள்ளச்சி, உறவினர் வெண்ணிலா ஆகியோர் கொடுமைப்படுத்தியதால் தான், சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் வெள்ளச்சி, வெண்ணிலா ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சங்கீதாவின் உறவினர்கள் நேற்று காலையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் சங்கீதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற சங்கீதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.