மாவட்ட செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு; பஸ்கள் நிறுத்தம் + "||" + DMK Leader Karunanidhi dies: shops shutters; Bus stop

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு; பஸ்கள் நிறுத்தம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு; பஸ்கள் நிறுத்தம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் நிறுத்தப்பட்டன. அமைச்சர் வீட்டை தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல், தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையங்கள், கடைவீதி உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மாலையிலேயே அடைக்கப்பட்டன. இதேபோல் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் மாலை, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. திண்டுக்கல், பழனியில் பஸ்நிலையம், மெயின்ரோடு உள்பட நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
வியாபாரிகள் அவசர, அவசரமாக கடைகளை அடைத்து விட்டு புறப்பட்டு சென்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் முதலே பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஒருசில ஊர்களுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.

வெளியூர் சென்ற பஸ்களை இரவில் ஆங்காங்கே உள்ள பணிமனைகளுக்கு கொண்டு செல்லும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர திண்டுக்கல்லில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்பட வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த 15 ஆம்னி பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.
அந்த பஸ்களில் சென்னை செல்ல பலர் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப இருசக்கர வாகன ஓட்டிகள் குவிந்தனர். இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அங்கு கருணாநிதியின் உருவ படத்துக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை கண்டித்து தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை முற்றுகையிட நேற்று இரவு தி.மு.க.வினர் 30 பேர் முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் தமிழக அரசை கண்டித்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நேற்று இரவு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல் மெரினாவில் இடம் ஒதுக்கி தரக்கோரி நேற்று இரவு திண்டுக்கல் பேகம்பூரில், த.மு.மு.க. சார்பில் மறியல் நடந்தது.