“தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோளில்லையே” கவிஞர் வைரமுத்து கண்ணீர்
‘தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே! பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே!’ என்று கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடைசியில் அது நேர்ந்தேவிட்டது. கலைஞர் மறைந்துவிட்டார்; எங்கள் கவியரங்கம் கலைந்துவிட்டது. எங்கள் முப்பத்தைந்து வருட உரையாடல் முடிந்துவிட்டது. தமிழ் இனத்தின் தனிப்பெருந் தலைவர் தமிழாக வாழ்ந்த கலைஞர் தன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டுவிட்டார். குடையைத் தாண்டிய மழையைப்போல் கண்ணீர் கொட்டுகிறது. நகக்கண்கள் தவிர, தமிழர்களின் எல்லாக் கண்களும் கலங்குகின்றன.
பள்ளத்தாக்கில் பெற்றெடுக்கப்பட்டு சிகரம் ஏறி சிம்மாசனம் பிடித்தவர். இரண்டு நூற்றாண்டுகளில் இரண்டு கால்களை ஊன்றித் தமிழ்ச் சமுதாயத்தைத் தாங்கிப் பிடித்தவர். ஒரு கையில் எழுதுகோலையும் மறுகையில் செங்கோலையும் எழுபது ஆண்டுகள் ஏந்தி இதயங்களை ஆண்டவர். அய்யோ! இன்று நம்மிடையே இல்லை.
அவரைப்போல் உழைக்கப் பிறந்தவர் ஒருவரும் இல்லை. உடன்பிறப்பே என விளித்து 7000 கடிதங்கள் 4168 பக்கங்களில் நெஞ்சுக்கு நீதியின் 6 பாகங்கள் 75 திரைப்படங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள். அவர் எழுதியதை அடுக்கி வைத்தால் அது அவரைவிட உயரமானதாக இருக்கும். கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் முதற்செய்தி: ‘உழைப்பு’.
போராடப் பிறந்தவர் கலைஞர். உயிர்ப்புள்ள ஒரு கட்சிக்கு 50 ஆண்டுகள் தலைவராக இருந்தவர், 13 சட்டமன்றத் தேர்தல்களில் தோற்காதவர், 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர், இந்தி எதிர்ப்பு, கல்லக்குடி, பாளையங்கோட்டைச் சிறை, எம்.ஜி.ஆர். பிரிவு, நெருக்கடி நிலை, ஆட்சியில் இல்லாத 13 ஆண்டுகள், கண்ணுக்குத் தெரிந்த வெளிப்பகை, கண்ணுக்குத் தெரியாத உட்பகை, கடைசியில் உடம்போடு உயிர்ப் போராட்டம் என்று வாழ்வே போராட்டமாய் வாழ்ந்தவர். கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் இரண்டாம் செய்தி: ‘போராடு’.
உழைக்கும் மக்களுக்குக் குடிசைமாற்று வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கை ரிக்ஷா ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமத்துவபுரம், பிச்சைக்காரர் மறுவாழ்வு, தலித்துகளுக்கு இலவச வீடுகள் இன்னும் எத்துணையோ எத்துணையோ. கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் மூன்றாம்செய்தி : ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்’.
தமிழுக்குச் செம்மொழி பெற்றுத்தந்த பெருமகன். இனமொழி அடையாளங்களை எழுத்தால் சொல்லால் செயலால் மீட்டெடுத்தவர். ஈராயிரமாண்டு நாகரிகத்தை அகழ்ந்து 21-ம் நூற்றாண்டுக்கு அடையாளம் காட்டியவர். கலைஞர் வாழ்வு உணர்த்திச் செல்லும் நான்காம் செய்தி: ‘தமிழா! இனமொழி அடையாளங்களை இழந்து விடாதே’.
ஓர் அரசனே புலவனாகவும், புலவனே அரசனாகவும் இருந்த பழைய வரலாற்றின் கடைசி நாயகன் கலைஞர்தான். 70 ஆண்டுகளாய்த் தமிழ்நாட்டுக் காற்று அவரது குரலுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தது. அரசியல் அவரது கருத்துக்குக் காத்திருந்தது. திரையுலகம் அவரது எழுத்துக்கு ஏங்கி நின்றது. பராசக்தியும் மனோகராவும் திரைத் தமிழுக்கு அன்றுமுதல் இன்றுவரை அளவுகோல்களாகிவிட்டன.
தொடக்ககாலத் தி.மு.கவில் ஐம்பெருந் தலைவர்களுள் ஒருவராகக்கூட இல்லாத கலைஞர் அண்ணாவுக்குப் பிறகு அரைநூற்றாண்டு காலம் அந்த இயக்கத்திற்கே தலைமை தாங்கியது ஆகாயமே அண்ணாந்து பார்க்கும் ஆச்சரியமாகும்.
நீண்ட வரலாறு கொண்ட திராவிட இயக்கத்தில் தந்தை பெரியாருக்குப் பிறகு 45 ஆண்டுகளும், அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு 49 ஆண்டுகளும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு 31 ஆண்டுகளும் இந்த மண்ணில் திராவிட லட்சியங்களைத் தன் தோளில் சுமந்து நடந்தவர் கலைஞர்.
அவர் இன்று இல்லை என்று நினைக்கிறபோது எனக்கு இன்றே இல்லை என்றே தோன்றுகிறது.
‘கனவில்லாத தூக்கத்தைப் போன்றது மரணமென்றால் அதற்காக நான் ஏன் பயப்பட வேண்டும்’ என்று எழுதிய தலைவர் கனவில்லாத தூக்கத்தில் கலந்துவிட்டார். ‘மானம் அவன் கேட்ட தாலாட்டு; மரணம் அவன் ஆடிய விளையாட்டு’ என்று எழுதிய தலைவர் மரணத்தோடு விளையாடப் போய்விட்டார்.
தமிழர்களின் சோகத்தோடு என் தனிச்சோகமும் என்னைத் தாக்குகிறது. பள்ளி வயதில் என்னை எழுதவைத்தவரே எங்கே உங்கள் கரங்கள்? என் பதினெட்டு நூல்களை வெளியிட்டவரே! எங்கே தலைமைதாங்கிய உங்கள் தலை?
35 ஆண்டுகளாய் என் அதிகாலைத் தொலைபேசியில் ஓசையோடு பேசிய அந்த ஆசை வாய் எங்கே? தந்தைபோல என்னைத் தாங்கிப்பிடித்தவரே! இப்போதுதான் என்னை நான் அனாதை என்று அறிகிறேன். நான் நொறுங்கிக் கிடக்கிறேன். உங்கள்மீது விழுந்த மரணத்தின் சம்மட்டி என் உள்ளத்தையும் அல்லவா உடைத்துப் போட்டுவிட்டது!
‘தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே! பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே!’ என்று ஊருக்கு ஓடிப்போய் தென்னைமரத்தடியில் ஓங்கிப் புலம்பி ஒப்பாரிவைக்கத் தோன்றுகிறது.
ஆனால் அவர் விட்டுச் சென்ற லட்சியம் எங்கள் கண்களைத் தொட்டுத் துடைக்கிறது.
தமிழின் கடைசி எழுத்து உள்ளவரை கலைஞர் வாசிக்கப்படுவார்; கடைசித் தமிழன் உள்ளவரை கலைஞர் பேசப்படுவார். தமிழ் நிலத்தின் கடைசி அங்குலம் உள்ளவரை அவர் பாதச் சுவடுகள் அழிவதில்லை.
தங்கத் தலைவனே! தமிழாசானே! நீ எனக்குப் பரிசளித்த உன் பேனா,
உன் புகழைப் பாடிக்கொண்டே இருக்கும். நீ விட்ட இடத்தை அது தொட்டுத் தொடர்ந்துகொண்டே இருக்கும். வானம் போன்றது உன் புகழ்; அது சுருங்குவதே இல்லை.
உனக்கு மரணமில்லை; தமிழின் ஒவ்வோர் எழுத்திலும் நீ வாழ்ந்துகொண்டேயிருப்பாய்.
Related Tags :
Next Story