மீதமாகும் உணவுகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்க திட்டம் தன்னார் தொண்டு நிறுவன பணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


மீதமாகும் உணவுகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்க திட்டம்  தன்னார் தொண்டு நிறுவன பணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Aug 2018 9:30 PM GMT (Updated: 8 Aug 2018 2:42 PM GMT)

நெல்லையில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கும் திட்ட விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை,

நெல்லையில் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கும் திட்ட விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

ஏழைகளுக்கு உணவு

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘‘உணவு கழிவு இல்லை’’ என்ற உணவு சேகரிக்கும் விழிப்புணர்வு வாகன தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா இந்த வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறியதாவது:–

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் தங்களது இல்ல விழாக்களின் போது மீதமாகும், சாப்பிடுவதற்கு தகுந்த நல்ல உணவுகளை ஏழை, எளிய மக்கள் மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு ‘‘உணவு கழிவு இல்லை’’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சேகரித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செல்போன் அழைப்பு

மீதமாகும் தரமான உணவுகளை 90877 90877 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அந்த தன்னார்வ அமைப்பு நேரில் வந்து மீதமாகும் உணவுகளை எடுத்துச் சென்று, தேவைப்படும் இடங்களை கண்டறிந்து ஒரு மணி நேரத்திற்குள் தேவையானவர்களுக்கு கொண்டு சென்று வழங்குவார்கள். இந்த சேவை, கோவை, மதுரை, சென்னை மற்றும் டெல்லி ஆகிய முக்கியமான நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சி உதவியுடன் இந்த உணவு சேகரிக்கும் தன்னார்வ அமைப்பு வாகனம் செயல்பட உள்ளது. இந்த திட்டம் நல்ல முறையில் செயல்பட்டால், திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் அய்யப்பன், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story