கருணாநிதி மறைவு: கடைகள் அடைப்பு– பஸ்கள் ஓடவில்லை பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன


கருணாநிதி மறைவு: கடைகள் அடைப்பு– பஸ்கள் ஓடவில்லை பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 3:02 PM GMT)

குமரி மாவட்டத்தில் 2–வது நாளாக நேற்றும் பஸ்கள் ஓடவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

நாகர்கோவில்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தன. கருணாநிதியின் மறைவையொட்டி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதுதவிர பெரும்பாலான பஸ்களும் இயக்கப்படவில்லை.

நேற்று 2–வது நாளாக அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் நாகர்கோவில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பெரும்பாலான ஆட்டோக்கள், வாடகை கார், வேன் போன்ற வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதுதவிர லாரி, சரக்கு வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களும் நேற்று இயக்கப்படவில்லை.

இதனால் நாகர்கோவில் கோட்டார், செட்டிகுளம் சந்திப்பு, ராஜாக்கமங்கலம் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, கோர்ட்டு சாலை, வடசேரி சாலை, நெல்லை சாலை உள்ளிட்ட நகரின் அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. மேலும் நகரில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவை அடைக்கப்பட்டு இருந்தன. ஒருசில மருந்துக் கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

அதேபோல் பூக்கடைகள், ஒன்றிரண்டு இறைச்சிக்கடைகள், வடசேரி, இருளப்பபுரம், கணேசபுரம் பகுதிகளில் உள்ள மீன் சந்தைகள் திறந்திருந்தன. வடசேரி கனகமூலம் சந்தையில் உள்ள ஒருசில பழக்கடைகள், காய்கறி கடைகளைத்தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆவின் பாலகங்கள் திறந்திருந்தன. வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் ஒன்றிரண்டு டீக்கடைகள் திறந்து இருந்தன.

பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு இருந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். குடும்பத்தோடு இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் சிலர் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்றனர். அருகில் பெட்ரோல் பங்கு எதுவும் இல்லாததால் தங்களது குடும்பத்தினரை கீழே இறக்கிவிட்டு, தங்களது இருசக்கர வாகனங்களை தள்ளியபடி நடந்து சென்றதையும் காண முடிந்தது. நாகர்கோவிலில் திறந்திருந்த ஒருசில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப கூட்டம் அலைமோதியது.

சினிமா தியேட்டர்களில் நேற்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. டாஸ்மாக் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவை அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

குளச்சல் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் குளச்சல் காமராஜர் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், அனைத்து பஸ்களும் சாஸ்தான்கரையில் உள்ள அரசு பணிமனையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. கன்னியாகுமரி சன்னதி தெரு, ரதவீதி, மெயின்ரோடு, காந்தி மண்டப பஜார், பார்க் வியூ பஜார், கடற்கரை சாலை, முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, விவேகானந்தபுரம், ரெயில்நிலையம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும், அரசு பஸ்கள் ஓடாததால், கன்னியாகுமரியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை, அரசு போக்குவரத்து கழக பணிமனை, விவேகானந்தபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையிலும் பஸ்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் கன்னியாகுமரியில் உள்ள புதிய பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி கடலில் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்தை ரத்து செய்தது. இதனால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கும் இயக்கப்படும் பொதிகை, குகன், விவேகானந்தர் ஆகிய 3 படகுகளும் படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

குழித்துறை, மார்த்தாண்டம், திருவட்டார், குளச்சல், திங்கள்சந்தை பணிமனைகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. எனவே மார்த்தாண்டம் பஸ் நிலையம் பஸ்கள் எதுவும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. மேலும் மார்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் அனைத்து சிறிய, பெரிய கடைகளும், நகைக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.

மார்த்தாண்டம் தினசரி மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு, மெயின்ரோடு உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மார்த்தாண்டத்தில் நடந்து வந்த மேம்பால பணிகளும் நேற்று நிறுத்தப்பட்டன.

Next Story