கருணாநிதியின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி மீனவர்களும் துக்கம் கடைபிடிப்பு


கருணாநிதியின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி மீனவர்களும் துக்கம் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 3:26 PM GMT)

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மீனவர்களும் துக்கம் கடைபிடித்தனர்.

நாகர்கோவில்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாகர்கோவில் நகரம் முழுவதும் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் சார்பிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. மேலும் ஆங்காங்கே கண்ணீர் அஞ்சலி பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

குறிப்பாக நாகர்கோவில் மீனாட்சிபுரம், கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பு, முதலியார் தெரு சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு சந்திப்பு, கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, வேப்பமூடு, வடசேரி சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பெரிய அளவிலான கண்ணீர் அஞ்சலி பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன. பல இடங்களில் அந்த பேனர்களில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன. அந்த பேனர்களில் “ஓய்வறியாத தலைவனே ஓய்வெடுக்க சென்று விட்டாயோ?“ என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்துக்கு தி.மு.க.வினரும், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகள், தெரு சந்திப்புகள், தெருக்கள், சாலையோரங்களில் கருணாநிதியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு, மலர் மாலைகள் அணிவித்து தி.மு.க.வினர் மற்றும் கருணாநிதியின் மீது பற்றுக்கொண்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் குமரி மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன. அந்தந்த பகுதிகளில் தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  கருணாநிதியின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு நகர காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் குளச்சல் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. அண்ணா சிலை சந்திப்பில் தொடங்கிய மவுன ஊர்வலம் காந்தி சந்திப்பு, பீச் சந்திப்பு, பள்ளி ரோடு வழியாக மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

குளச்சலில் கடலுக்கு சென்ற விசைப்படகுகளில் சில படகுகள் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பின. கருணாநிதி மறைவையொட்டி, துக்கம் அனுசரிக்கும் வகையில் விசைப்படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்கி ஏலக்கூடத்துக்கு கொண்டு வராமல் படகிலேயே மீனவர்கள் வைத்து இருந்தனர். இதனால் மீன்பிடி ஏலக்கூடம் மீன்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மீன்களை வெளியூர்களுக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. குளச்சல் நகர காங்கிரஸ் கட்சியினர், பஸ்நிலையம் பகுதியில் கருணாநிதி படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் கருணாநிதியின் உருவப்படம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து துக்கத்தை அனுசரித்தனர். கன்னியாகுமரி மற்றும் கொட்டாரத்தில் தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தன.

கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு வரும் 350–க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் தி.மு.க. தலைவர் மறைவையொட்டி நேற்று மீன்பிடிக்க செல்லாமல் துக்கத்தை அனுசரித்தனர்.

Next Story