கருணாநிதி மரண செய்தியை கேட்டு தி.மு.க. பெண் தொண்டர்கள் உள்பட 6 பேர் அதிர்ச்சியில் சாவு


கருணாநிதி மரண செய்தியை கேட்டு தி.மு.க. பெண் தொண்டர்கள் உள்பட 6 பேர் அதிர்ச்சியில் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 6:55 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மரண செய்தியை கேட்டு தி.மு.க. பெண் தொண்டர்கள் உள்பட 6 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா(வயது 65). இவர் தி.மு.க. கிளை உறுப்பினராக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த சின்னையா அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

இதையடுத்து சின்னையாவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (50). இவர் தி.மு.க. கிளைகழகத்தில் உறுப்பினராக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு கதறி அழுதார். பின்னர் “தலைவா என்னை விட்டு சென்று விட்டாயே” என கூறிக்கொண்டு நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடலுக்கு தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல திருவரங்குளம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (75). இவர் தி.மு.க.வில் தீவிர தொண்டராக இருந்தார். இந்தநிலையில் கருணாநிதி இறந்த செய்தியை தனது வீட்டில் இருந்த தொலைக்காட்சியில் பார்த்து அழுது புலம்பிய அவர் சிறிது நேரத்தில் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

இதையடுத்து பழனியம்மாளின் உடல் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி பொன்னம்மாள் (85). இவர் நேற்று முன்தினம் இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதிர்ச்சியில் திடீரென்று பொன்னம்மாள் மயங்கி விழுந்தார். சற்றுநேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் சுரேஷ்குமார் (28). தி.மு.க. உறுப்பினரான இவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமார் எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றார்.

பின்னர் அவர் திடீரென்று மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, சுரேஷ்குமார் உடல் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சுரேஷ்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் நெய்தலூரை சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவரது மனைவி தமிழ்ராணி (45). தி.மு.க. தொண்டர். நேற்று மாலையில் இவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை சோகத்துடன் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். கண்கலங்கியபடி இருந்த அவர் திடீரென நெஞ்சை பிடித்தபடியே கீழே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தண்ணீரை எடுத்து வந்து தெளித்து அவரை எழுப்பியபோதும் கூட அசைவற்று இருந்தார். அப்போது தான் தமிழ்ராணி இறந்ததை அறிந்ததும் குடும்பத்தினர் கதறி துடித்தனர். இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து அவரது கண்கள், சிறுநீரகம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறந்த தமிழ் ராணிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதுபோல் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தி.மு.க கிளை கழக பிரதிநிதி. இவரது மனைவி சரோஜா (43). கருணாநிதியின் மரணச்செய்தியை கேட்டு நேற்று முன்தினம் இரவில் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து சரோஜா இறந்தார். இறந்த சரோஜாவுக்கு 2 மகனும், 3 மகள்களும் உள்ளனர். 

Next Story