நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு


நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Aug 2018 4:00 AM IST (Updated: 9 Aug 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் குன்றக்குடி முதல் காரைக்குடி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் தார்ச்சாலை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பாதரக்குடியில் இருந்து காரைக்குடி வரை தார்ச்சாலை சீரமைக்கப்படும் பணிகளையும், அரியக்குடியில் இருந்து காரைக்குடி வரையிலான சாலையை சீரமைத்து இருபக்கவாட்டிலும் கிராவல் மண் பரப்பப்பட்டு புனரமைக்கப்பட்டு உள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். அப்போது பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்ததுடன், ஒவ்வொரு இடத்திலும் சாலையின் கரையோர பகுதியில் பரப்பப்பட்டுள்ள மண் கொள்ளளவு மற்றும் தார்ச்சாலையில் கலவை பொருட்களின் அளவீடு குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் காரைக்குடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் திருவேலங்குடி உயர்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் இடைநிற்றல் கல்வி திட்டத்தின்கீழ் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, செயற்பொறியாளர் தமிழகன், பொதுப்பணித்துறை(கட்டிடங்கள்) செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story