கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை


கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 7:06 PM GMT)

கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.

பெரம்பலூர்,

தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மாலை காலமானார். கருணாநிதி மறைவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதலே கடைகள், டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் இரவோடு இரவாக சரக்கு வாகனங்களில் ஏறி சொந்த ஊருக்கு சென்றதை காணமுடிந்தது.

பெட்ரோல் பங்க்குகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட வாகன ஓட்டிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று முன்தினம் மாலையில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாக மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அனுப்பி வைத்ததால், அவர்கள் சிரமமின்றி தங்களது வீடுகளுக்கு சென்றடைந்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதலே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்றும் பெரம்பலூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளி வாசல் தெரு, பெரம்பலூர் ஸ்ரீ மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட் சந்தை, உழவர் சந்தை, பெரம்பலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அடைக்கப்பட்டதால் பால், டீ, காபி விற்பனை செய்ய பெரம்பலூரில் நகரில் பல்வேறு பகுதிகளில் திடீர் கடைகள் முளைத்தன.

அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படாததால் பெரம்பலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. அரசு பஸ்கள் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் மட்டும் முக்கியமான பகுதிகளுக்கு சென்று வந்தனர். மேலும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தியேட்டர்களில் சினிமா காட்சிகள் நேற்று முழுவதும் ரத்து செய்யப்பட்ட தால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர் கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பொழுது போக்கிற்கு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியதோடு மட்டுமின்றி டி.வி.களில் நேரலையாக ஒளிப்பரப்பான கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்வுகளை பார்த்ததை காண முடிந்தது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது என்று கூறலாம்.

முன்னதாக நேற்று முன் தினம் இரவு பெரம்பலூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல், செங்குணம் பிரிவு சாலை பகுதிகளில் வந்த 2 அரசு பஸ்களின் மீது கருணாநிதி மறைவையொட்டி மர்மநபர்கள் கற்களை வீசி உடைத்தனர். மேலும் பெரம்பலூர்-துறையூர் சாலையில் ரெங்கநாதபுரத்தில் ஒரு மரத்தை மர்மநபர்கள் வெட்டி சாலையில் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குகள் பதிவு செய்து மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story