அரசு புறம்போக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பழனி துணை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


அரசு புறம்போக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பழனி துணை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:00 PM GMT (Updated: 8 Aug 2018 8:18 PM GMT)

அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பழனி துணை கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திண்டுக்கல் வேடசந்தூரைச் சேர்ந்த கே.ராமசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

வேடசந்தூர் குட்டம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணறு ஒன்று இருந்தது. இந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து, அங்கிருந்த கிணற்றையும் மூடிவிட்டனர். மொத்த அரசு இடத்தையும் வேலி போட்டு சொந்த இடம் போல் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த இடத்தை வருவாய் ஆவணங்களில் கன்னிமார் கோவில் சொத்து என்று மாற்றம் செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு இடத்தையும், நீர்நிலையையும் மீட்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குட்டம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வக்கீல் ஆணையர் நியமனம் செய்யவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலையை மீட்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து வேடசந்தூர் தாசில்தார் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி தாசில்தார் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தார். ஆனால் இதை எதிர் மனுதாரர்கள் ஏற்று கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் வி.துரைசாமி,அனிதாசுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

வேடசந்தூர் குட்டம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு பழனி துணை கலெக்டர் புதிதாக உரிய நோட்டீஸ் வழங்க வேண்டும். அதன் பின் அவர்கள் கொடுக்கும் பதிலை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற 4 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் பழனி துணை கலெக்டரின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story