மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் + "||" + Karunanidhi's death Leaders, volunteers are mourning

கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல்

கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மதுரையில் தொண்டர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை,

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

எழுத்தாற்றல், பேச்சாற்றல், நிர்வாக ஆளுமை அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் பெருமை சேர்த்தவர் கலைஞர் கருணாநிதி. பள்ளி, கல்லூரி படிப்பில் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு கூட இல்லாத ஞாபக சக்தி கலைஞருக்கு மட்டுமே உண்டு. உடன்பிறப்பே என்கிற ஒற்றைச்சொல்லில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஈர்த்தவர்.

தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அணையா ஜோதி உருவாக்கியவர். இப்படிப்பட்ட கலைஞரின் பிரிவை எப்படி விவரிப்பது. நாம் ஒவ்வொருவரும் கண்ணீரை சிந்தி ஆறுதல் அடைந்து விட முடியாது. ஒட்டு மொத்த தமிழினமும் தனது தந்தையை இழந்து துயரத்தில் தவிக்கும் இந்த தருணத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கழக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். காவிரி நதிக்கரையிலிருந்து உதித்தவர், இன்று காவிரி மருத்துவமனையில் இருந்து விடைபெற்றார். இனி காவிரி மைந்தனாக காலமெல்லாம் தமிழ் உலகில் வாழ்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய பார்வர்டு பிளாக்(பசும்பொன்) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.மகேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பகுத்தறிவு பகலவனின் பள்ளியிலே பயின்றவரே. அண்ணாவின் பல்கலையில் அதிகாரம் பெற்றவரே. உயிருக்கும் மேலான உடன்பிறப்பே என்றழைத்து ஓயாது உழைத்திட்ட உதயசூரியனே. உன் மரணச்செய்தியினை மனது ஏற்கவில்லை. தமிழிலே பேசினால் தமிழை பேசினால் தட்டிக்கேட்கவோர் தலைவன் நீ இல்லாமல் தமிழில் பேசுவதே தவறென்று சொல்வாரே. வடக்கத்தி மொழியெல்லாம் வந்திடுமே என்செய்வேன் முத்தமிழறிஞரே, செம்மொழிக்கலைஞரே உன் வித்தகத் தமிழுக்கு வீரியம் அதிகம். நீ விதைத்த விதையெல்லாம் வீரியமாய் முளைத்து எழும். மனித இனம் உள்ளவரை மறக்காது உன் திருப்பெயரை. வரலாற்று நாயகனே வாழிய உன்புகழே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கலைஞர், தமிழ்ப்பெருமக்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத தங்கத் தலைவன். காலை சூரியன் உதயமாகும் முன்னரே, அவரது கருத்து உதயமாகி விடுவது வழக்கம். பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு தமது பேச்சாலும், எழுத்தாலும் தமிழ் இன எழுச்சியை, உணர்வை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாபெரும் ஆசான். என் மீது அளவற்ற அன்பும், பாசமும், பற்றுதலும் காட்டிய அன்புமிகு தலைவன். தமிழக அரசியலின் கருவூலம். ஒரு மாபெரும் சகாப்தம். தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவ நதி. இந்த நதிக்கு அழிவே இல்லை. அது தான் கருணாநிதி என்னும் நிரந்தர நிதி, தமிழ் இன உணர்வின் மதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தி.மு.க. தொண்டர்கள் பலர் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் வாசகத்துடன் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே போஸ்டர், பேனர் வைத்து இரங்கல் தெரிவித்து இருந்தனர். டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்பிலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...