தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: வெறிச்சோடி கிடந்த சிவகாசி நகரம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி சிவகாசி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் நகரமே வெறிச்சோடி கிடந்தது.
சிவகாசி,
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த தகவல் பரவியது முதல் சிவகாசியில் உள்ள வர்த்தக நிறுவன உரியமையாளர்கள் தங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர். இதனால் சிவகாசி ரதவீதி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து சிவகாசி வந்தவர்கள் திரும்பி செல்ல போதிய பஸ் வசதிகள் செய்யப்பட்டது. இதனால் எவ்வித பிரச்சினையும் இன்றி பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இரவு 10 மணி வரை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு நேரத்தில மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவில்பட்டி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த பயணிகள் அவர்களது வீடுகளுக்கு செல்ல தேவையான வசதிகளை போலீசார் செய்து கொடுத்தனர்.
வழக்கமாக சிவகாசி நகரில் இருந்து அதிகாலை 4 மணிக்கே பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். இதனால் அதிகாலை நேரத்திலேயே நகரில் மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் நேற்று அதிகாலை நகரில் எந்த கடையும் திறக்கப்படவில்லை. பால்பாக்கெட் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு வாகனம் நிறுத்தப்பட்டு 15–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து எந்த ஊருக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. மினி பஸ்கள் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவைகள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் எப்போது வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று அந்த பகுதி மயான அமைதியாக காணப்பட்டது.
சிவகாசி, திருத்தங்கல் நகரங்கள் மற்றம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தி.மு.க.வினர் தங்கள் கட்சியின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட்டனர். பல இடங்களில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகாசியில் தற்போது இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுக்க வெளியூர் வியாபாரிகள் வந்து செல்லும் காலம். இதனால் சிவகாசி நகரம் வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பரபரப்பாக காணப்படும். ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி நேற்று சிவகாசியில் உள்ள 400–க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அச்சகங்கள் இயங்கவில்லை. இதனால் நகரில் பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் நிலையங்கள், தியேட்டர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மொத்தத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கருணாநிதிக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.