மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவு தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை + "||" + Karunanidhi's death was blocked by shops in Tanjore district for 2nd day Buses did not run

கருணாநிதி மறைவு தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை

கருணாநிதி மறைவு தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை
கருணாநிதி மறைவையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்களும் இயங்கவில்லை. கூட்டம் இல்லாததால் ரெயில் நிலையமும் வெறிச்சோடியது.
தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். அவருடைய உடல் நேற்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நேற்று 2-வது நாளாகவும் கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, மருத்துவகல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், கீழவாசல், காமராஜர் மார்க்கெட், பர்மாபஜார், கரந்தை, மேரீஸ்கார்னர், ராமநாதன் ரவுண்டானா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில இடங்களில் மட்டும் தேனீர் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.


தஞ்சை மாவட்டத்தில் பஸ்களும் இயங்கவில்லை. நகர பஸ்கள், வெளியூர் செல்லும் பஸ்கள் என எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இன்றி காணப்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தஞ்சை பெரியகோவிலும் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் ரெயில் நிலையமும் வெறிச் சோடியது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன. திரையரங்குகளில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

கருணாநிதி மறைவையொட்டி நேற்று காலை திருச்சிற்றம்பலத்தில் மவுன ஊர்வலமும், இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. முன்னதாக திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட மவுன ஊர்வலம், முக்கியவீதிகளின் வழியாக சென்று பஸ்நிறுத்தத்தை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம் இரங்கல் உரை ஆற்றினார். இதில் தி.மு.க.வினர், வர்த்தக சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், சானூரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பட்டுக்கோட்டையில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், நகை கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டு இருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.