கருணாநிதி மறைவையொட்டி திறந்திருந்த கடைகளை மூடக்கூறிய போலீசார்


கருணாநிதி மறைவையொட்டி திறந்திருந்த கடைகளை மூடக்கூறிய போலீசார்
x
தினத்தந்தி 9 Aug 2018 3:45 AM IST (Updated: 9 Aug 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி மறைவையொட்டி வேலூரில் அடைக்கப்பட்ட கடைகளில் ஒருசில கடைகள் நேற்று மாலை திறக்கப்பட்டன. திறந்திருந்த கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் கூறியதால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 


தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையடுத்து அன்று மாலை முதல் வேலூரில் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்களும் ஓடவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

கருணாநிதியின் மரண அறிவிப்பு வெளியாகும் முன்னரே வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் பலர் முன் எச்சரிக்கையாக பெட்ரோல் பங்க்குகளுக்குச் சென்று தங்களின் வாகனத்துக்குப் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டனர். இதனால் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருணாநிதி இறந்த தகவல் வெளியான அடுத்த வினாடியே வேலூர் நகரில் உள்ள அனைத்துப் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன.

இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து மாலை 7 மணியளவில் ஒரு சில பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. வாகன ஓட்டிகள் முண்டியடித்துக் கொண்டு தங்களின் வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டனர்.
வேலூரில் பகல் முழுவதும் அடைக்கப்பட்டிருந்த கடைகளில் ஒரு சில ஓட்டல், டீக்கடைகள் மாலை 6 மணியளவில் திறக்கப்பட்டன. குறிப்பாக வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ஒரு சில ஓட்டல், டீக்கடைகள் திறக்கப்பட்டதால், அங்குப் பொதுமக்கள் அதிகளவில் சென்றனர்.

அப்போது அங்குப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், திறந்திருந்த கடைகளை மூடுமாறு வியாபாரிகளை வலியுறுத்தினர். இதையடுத்து கடைகள் மூடப்பட்டன. இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, நகரில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, ஒருசில இடங்களில் திறக்கப்பட்டு இருந்த ஓரிரு கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கடைகள் திறக்கப்பட்டால் அங்குத் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் நாங்கள் திறந்திருந்த கடைகளை மட்டும் மூடுமாறு வியாபாரிகளிடம் கூறினோம், என்றனர்.

வேலூர் மக்கான் சிக்னல் அருகே கருணாநிதியின் உருவப்படத்துக்கு வேலூர் மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவி கங்காம்மாள் தலைமையில் திருநங்கைகள் பலர் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். 

Next Story