காதல் மனைவி கழுத்தை நெரித்து கொலை வாலிபர் கைது


காதல் மனைவி கழுத்தை நெரித்து கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2018 4:45 AM IST (Updated: 9 Aug 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே பள்ளியாடி பழைய கடை பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 83). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி பெல்சி. இவர்களுக்கு 7 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகன் பக்ளி தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்த ரத்தினமணி மகள் ஷைலா (31) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுனித் (8) என்ற மகனும், அடோனா (3) என்ற மகளும் உள்ளனர்.

பக்ளி தேவானந்தம் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்தார். ஷைலா, தனது மாமனார், மாமியாருடன் குழந்தைகளுடன் தங்கி வந்தார். இதற்கிடையே விடுமுறையில் பக்ளி தேவானந்தம் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் குறித்து ஷைலாவிடம், பக்ளி தேவானந்தம் கேட்டார். அதற்கு ஷைலா சரியான பதிலை சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஷைலா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்றுமுன்தினம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஷைலா புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது கணவர் மது குடித்து விட்டு சித்ரவதை செய்வதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து போலீசார், பக்ளி தேவானந்தத்தை அழைத்து விசாரணை நடத்தினர்.

பிறகு ஷைலாவையும், பக்ளி தேவானந்தத்தையும் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அன்றைய தினம் நள்ளிரவு பக்ளி தேவானந்தம், ஷைலாவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பக்ளி தேவானந்தம், கழுத்தை நெரித்தும், தலையணையால் அமுக்கியும் ஷைலாவை கொன்றார்.

மனைவியை கொன்றதை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து விட்டு வெளியேறினார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலையில் ஷைலாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதை கண்ட ஷைலாவின் உறவினர்கள், பக்ளி தேவானந்தத்தின் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று கூறி உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், பக்ளி தேவானந்தத்தின் பெற்றோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதைத் தொடர்ந்து ஷைலாவின் உடலை போலீசார் பிரேத பிரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த பக்ளி தேவானந்தம் நேற்று மதியம் தக்கலை போலீசில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story