தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
கோவை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்றுமுன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கிட்டாம்பாளையம், வடுகபாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்கு கோவை புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பி.முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், வட்டார தலைவர் கராத்தே ராமசாமி, நகர தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் வி.எம்.ரங்கசாமி, பாலு, சின்னமணி, தங்கராஜ், பொன்னுசாமி, செல்வம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் மாநில பொருளாளர் நேருநகர் நந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனக்கென தனி இடத்தை பிடித்து திராவிட அரசியலை தேசிய அளவில் நிறுவியவர் கருணாநிதி. தமிழுக்கு உலக அரங்கில் மங்கா புகழை தேடித்தந்தவர். அரசியலில் மாற்றுகருத்துகள் உடைய தலைவர்களின் கருத்துகளுக்கு சுதந்திரம் அளித்தவர். அறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயமாக தன் மீதான விமர்சனங்களையும் ஏற்று சோதனை களை சாதனைகளாக மாற்றிய சரித்திர நாயகன். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் உரைநடை தமிழின் ஆசான். அவரின் புகழ் உலகம் உள்ளளவும், உதயசூரியனாக பிரகாசமாக வாழும். கருணாநிதியின் ஆத்மா சாந்தியடைய கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாக இறைவனை பிரார்த்திக் கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோவை 48-வது வார்டு கணபதி ரத்தினபுரி பகுதியில் தினேஷ் ஏற்பாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ராஜகோபால், சிவக்குமார், மணல்மகேஷ், கந்தவேல், பழனிசாமி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்நிலையம் முன்பு கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Related Tags :
Next Story