தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: மாவட்டத்தில் கடைகள் அடைப்பு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: மாவட்டத்தில் கடைகள் அடைப்பு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 9 Aug 2018 4:15 AM IST (Updated: 9 Aug 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை.

கிருஷ்ணகிரி,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை முதல் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் இயங்குவது படிப்படியாக குறைந்தன.

இதன்பின்னர் நேற்று மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலை, சென்னை சாலை, ராயக்கோட்டை சாலை உள்பட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அதே போல கிருஷ்ணகிரியில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கிருஷ்ணகிரி நகரில் ஆட்டோக்களும் நேற்று இயக்கப்படவில்லை. நகரில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு, ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, பாகலூர், பேரிகை, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, கல்லாவி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி என அனைத்து பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறு, டி.வி.க்களில் ஒளிபரப்பான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை பார்த்தவாறு இருந்தனர்.

கருணாநிதி மறைவையொட்டி கர்நாடக மாநில அரசு பஸ்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இயக்கப்படவில்லை.

மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மூடப்பட்டிருந்தன. கருணாநிதி மறைவை முன்னிட்டு மாவட்டத்தில் எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 1,200 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story