மாவட்ட செய்திகள்

ஓசூரில் கருணாநிதி உருவப்படத்திற்கு 2 டன் பூக்களால் அலங்காரம் + "||" + 2 tons of flowers for the Karunanidhi image in Hosur

ஓசூரில் கருணாநிதி உருவப்படத்திற்கு 2 டன் பூக்களால் அலங்காரம்

ஓசூரில் கருணாநிதி உருவப்படத்திற்கு 2 டன் பூக்களால் அலங்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலமும், கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள். ஓசூரில் கருணாநிதி உருவப்படத்தை சுற்றி 2 டன் பூக்களை கொண்டு அலங்கரித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுகா அலுவலக சாலை, பழைய பெங்களூரு சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தமிழக பஸ்கள் மற்றும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் இயக்கப்படாததால், ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.


ஓசூர் பஸ் நிலையம் எதிரே பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் நகர துணை செயலாளரும், பூ வியாபாரிகள் சங்க தலைவருமான கே.திம்மராஜ் தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்தை சுற்றிலும் ரோஜா, சாமந்தி, அரளி, பன்னீர் இலை, பட்டன் ரோஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட வகைகளில் 2 டன் பூக்களை கொண்டு அலங்கரித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில், ஓசூர் நகர பொருளாளர் சென்னீரப்பா, நகர துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி சரவணன், மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்தில் கருணாநிதி மறைவையொட்டி அவருடைய படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் கதறி அழுதார்கள்.

பர்கூர் அண்ணா நகரில், கடந்த 1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தை தொடங்கினார். 24 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மறுவாழ்வு இல்லத்தில் 160 பேருக்கு மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தங்களுக்கு வாழ்வு அளித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பெங்களூரு சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மவுன ஊர்வலமாக சென்றனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் அஸ்லம், தண்டபாணி, திருமலைச்செல்வன், மாதவன், பிர்தோஸ் கான், கராமத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன் தலைமையில் தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா, பழைய சப்-ஜெயில் ரோடு, சேலம் சாலை வழியாக ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலை வரை சென்றது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்ட நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் சங்கம் சார்பிலும், கிருஷ்ணகிரி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மவுன ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் எதிரில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில இணை செயலாளர் நந்தகுமார், ஒன்றிய சட்ட திட்ட விதிகள் திருத்தக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கருணாநிதி உருவப்படத்திற்கு ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார்ராவ், நிர்வாகிகள் சந்திரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை பணிமனை எதிரில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பன்னீர்செல்வம், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், மாதேப்பள்ளி, நேர்லகிரி தீர்த்தம் போன்ற பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி நகரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு தி.மு.க.வினர் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல மாவட்டம் முழுவதும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மவுன ஊர்வல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரி தொலைபேசிநிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, சிசுபாலன், ராமச்சந்திரன் கிரைசாமேரி, அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரசெயலாளர் ஜோதிபாசு, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகி பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) மாவட்டசெயலாளர் கோவிந்தராஜ், ம.தி.மு.க நகரசெயலாளர் வஜ்ரவேல் சமூகநல்லிணக்கமேடை நிர்வாகி ராஜசேகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.