அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 Aug 2018 3:40 AM IST (Updated: 9 Aug 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி, 



உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை பகுதியை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த மாதம் மேற்குதொடர்ச்சிமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அணைக்கு இரவு-பகலாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணை நிரம்பும் சூழல் நிலவியதால் அமராவதி ஆற்றின் கரையோரம் வசித்து வரும் பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 16-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் பருவ மழையின் தாக்கம் குறைந்து விட்டதால் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வந்தது. இதையடுத்து அணையின் ஷட்டர்கள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீர் அடைக்கப்பட்டு பாசனத்திற்காக பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில் முதல்சுற்று தண்ணீர் வினியோகம் நிறைவுபெற்றதால் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் அணையின் நீர்இருப்பு உயர்ந்து வந்தது. இந்த சூழலில் நேற்று மேற்குதொடர்ச்சிமலை பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது அங்கு சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்படுவதற்கான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த நீர்மட்டம் 86.91 அடி உயரத்திற்கு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 844 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 240 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

Next Story