ஊத்துக்கோட்டை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், விசாரணையில் தகவல்


ஊத்துக்கோட்டை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2018 4:30 AM IST (Updated: 9 Aug 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் என்று அடையாளம் காணப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை பகுதியில் புகழ்பெற்ற காட்டு செல்லிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பின்புறத்தில் அடர்ந்த காடு உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த காட்டு பகுதியில் 2 பேர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். கொலை செய்யப்பட்ட அவர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி சம்பவ இடத்தை பார்வையிட்டார். கொலையாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் கொலையுண்டவர்களின் அடையாளம் தெரிந்தது. ஒருவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் செல்லியம்மன் நகர் காந்தி தெருவை சேர்ந்த கோபால் என்பவரது மகன் விக்கி என்கின்ற விக்னேஷ் (வயது 22) என்பதும், மற்றொருவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஓட்டேரி அறிஞர் அண்ணா காலனி நேரு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பரது மகன் சத்யா (22) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. விக்னேஷ் மற்றும் சத்யா ஆகியோர் மீது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தலா 25–க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.

இவர்கள் பிரபல ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர்களை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்யப்பட்டனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் உறுதி அளித்தனர்.


Next Story