கும்மிடிப்பூண்டி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் டிரைவர் கைது, 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்


கும்மிடிப்பூண்டி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் டிரைவர் கைது, 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 10:31 PM GMT)

லாரி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தவர்சிங் (வயது 44). லாரி உரிமையாளர். இவர் 2000–ம் ஆண்டு தனக்கு சொந்தமான லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வந்தார். லாரியை அதே பகுதியை சேர்ந்த டிரைவரான மங்குபாய் என்ற அப்துல் சலீம் (42) ஓட்டி வந்தார். பிரேம் சந்த் (22) கிளீனராக உடன் வந்தார்.

சென்னையில் வேலை முடிந்தவுடன் கும்மிடிப்பூண்டி வழியாக அந்த லாரி ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் அருகே லாரியை சாலையோரம் நிறுத்தி, லாரி உரிமையாளர் உள்பட 3 பேரும் சப்பாத்தி செய்து சாப்பிட்டனர். அப்போது டிரைவர் மங்குபாய் தனது மகளின் திருமண செலவிற்காக ரூ.5 ஆயிரத்தை, லாரி உரிமையாளரான தவர்சிங்கிடம் கேட்டார்.

அவர் பணம் தர மறுத்ததால் கிளீனர் பிரேம் சந்துடன் சேர்ந்து மங்குபாய் லாரி உரிமையாளரான தவர்சிங்கை அடித்துக்கொலை செய்து பின்னர் தீ வைத்து எரித்துள்ளார். லாரி உரிமையாளரிடம் இருந்த ரூ.42 ஆயிரத்தை எடுத்து சென்றாக கூறப்படுகிறது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து லாரி கிளீனரான பிரேம்சந்தை ஏற்கனவே கைது செய்தனர். ஆனால் லாரி டிரைவர் மங்குபாய் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் செந்தில் முருகன், சபாபதி ஆகியோர் ராஜஸ்தானுக்கு சென்று 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த லாரி டிரைவர் மங்குபாயை கைது செய்தனர்.


Next Story