மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
பண்ருட்டி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
பண்ருட்டி அருகே உள்ள எழுமேடு கிராம நிர்வாக அலுவலர் மாயவன் மற்றும் கிராம உதவியாளர்கள் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வலையகாரகுப்பம் மண்டபத்துக்கு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவரான கண்டரக்கோட்டை மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் புஷ்பநாதன் என்கிற கொய்யாப்பழம்(வயது 24) என்பவர், கிராம நிர்வாக அலுவலர் மாயவன் மற்றும் கிராம உதவியாளர்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மாயவன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் வழக்கு பதிவுசெய்து புஷ்பநாதனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் புஷ்பநாதன் மீது பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் 2 மணல் கடத்தல் வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருவதால் அதை தடுக்கும் வகையில் புஷ்பநாதனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்ற கலெக்டர் தண்டபாணி, புஷ்பநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள புஷ்பநாதனிடம் சிறை அதிகாரி மூலம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story