மராத்தா சமுதாயத்தினர் சார்பில், நவிமும்பையை தவிர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு


மராத்தா சமுதாயத்தினர் சார்பில், நவிமும்பையை தவிர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 11:28 PM GMT (Updated: 8 Aug 2018 11:28 PM GMT)

மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி இன்று நவிமும்பையை தவிர மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. புனேயில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

மராட்டிய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். அண்மையில் இடஒதுக்கீடு கோரி இவர்கள் நடத்திய போராட்டத்தினால் மாநிலம் முழுவதும் பயங்கர வன்முறை வெடித்தது. நவிமும்பையில் நடந்த வன்முறையில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். கல்வீச்சில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

அந்த சமுதாயத்தை ேசர்ந்த 6 பேர் கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொண்டனர்.

ஜூலை 18-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலான 10 நாட்களில் 250 இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. வன்முறை காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வன்முறைகள் தொடர்பாக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் அழைத்து பேசினார். அப்போது, சிறப்பு சட்டசபை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதனால் வன்முறை சற்று ஓய்ந்தது.

இந்தநிலையில், இடஒதுக்கீடு கேட்டு இன்று (வியாழக்கிழமை) மராத்தா சமுதாயத்தினர் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இது மராட்டியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ள சகல் மராத்தா சமாஜ் தலைவர் அமோல் ஜாதவ் என்பவர் கூறுகையில், ‘நவிமும்பையை தவிர்த்து மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை முழுஅடைப்பு அமைதியான முறையில் நடைபெறும்.

இந்த முழுஅடைப்பு போராட்டத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகள், பள்ளி, கல்லூரிகளின் செயல்பாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

கடந்த மாதம் நவிமும்பையில் நடந்த முழு அடைப்பினர் போது வன்முறையின் பதற்றம் இன்னும் நீடிப்பதால் அங்கு முழு அடைப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புனே சாக்கனில் கடந்த 30-ந்தேதி மராத்தா சமுதாயத்தினரின் பேரணியில் பயங்கர வன்முறை உண்டானது. 80 வாகனங்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சேதப்படுத்தப்பட்டன.

2 பள்ளிக்கூட பஸ்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதன் காரணமாக இன்று நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்திலும் புனேயில் வன்முறை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புனே மாவட்ட கலெக்டர் நவல் கிஷோர்ராம் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு உள்ளார். வியாபாரிகள் கடைகளை அடைக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

சாக்கன் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் அடைக்கப்படுகின்றன. முழுஅடைப்பின் போது வன்முறைகளை தடுக்க மாநில ரிசர்வ போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

Next Story