பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து; 45 தொழிலாளர்கள் படுகாயம்


பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து; 45 தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 9 Aug 2018 5:01 AM IST (Updated: 9 Aug 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

மும்பை செம்பூரில் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவன எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இங்குள்ள ஒரு கொதிகலன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதன் காரணமாக ஆலை தீப்பிடித்து எரிந்தது.

அங்கிருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

மேலும் பலர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வாகனங்களில் விரைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆலைக்குள் படுகாயம் அடைந்து கிடந்த 45 தொழிலாளர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆலையில் எரிந்த தீயை தீயணைப்பு படையினர் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து வெகுநேர போராட்டத்துக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

கொதிகலன் வெடித்து ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story