கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை


கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 8 Aug 2018 11:35 PM GMT (Updated: 8 Aug 2018 11:35 PM GMT)

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.

கடலூர், 

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் கடைவீதிகளிலும், தெருக்களிலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும் பொதுமக்களும், தி.மு.க.வினரும் கருணாநிதியின் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் நேற்று நடைபெற்றதால், அரசு சார்பில் பொதுவிடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. அரசு கருவூலங்கள் மட்டும் குறைந்த பணியாளர்களுடன் இயங்கியது.

மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர். கடலூர் நகரில் லாரன்ஸ் ரோடு, வண்டிப்பாளையம் சாலை, போடிச்செட்டி தெரு, பாரதிசாலை, நேதாஜி ரோடு, முதுநகர் உள்பட நகரம் முழுவதும் கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மாவட்டத்தில் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால், பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. இதேப்போல் லாரிகள், வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

மேலும் அரசு பஸ்கள் அந்தந்த பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விருத்தாசலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ்களும் இயக்கப்படாததால் விருத்தாசலம் பஸ் நிலையம், சேலம் சாலை, கடலூர் சாலை என முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் சிதம்பரத்தில் உள்ள காசுக்கடை தெரு, மேலவீதி, தெற்குவீதி உள்ளிட்ட நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சேத்தியாத்தோப்பில் வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். இந்த வாரச்சந்தையில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்வார்கள். ஆனால் கருணாநிதி மறைவையொட்டி நேற்று வாரச்சந்தை நடைபெறவில்லை. காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

பண்ருட்டியில் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் கும்பகோணம் சாலை, காந்திமார்க்கெட், பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. நெல்லிக்குப்பம், நெய்வேலி என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மாலை 6 மணி வரை மூடியிருந்தன. மாவட்டத்தில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை, மக்களும், தி.மு.க. தொண்டர்களும் அமைதியான முறையில் தங்கள் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர். 

Next Story