நீர்வரத்து அதிகரித்ததால் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது
மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் 4 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடச்சி மலை அடிவாரப்பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியாக உயர்ந்தது. எனவே பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் காலையில் பில்லூர் அணைக்கு வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்ட உயரம் 93 அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 93 அடியில் இருந்து 97 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால் மாலை 4.30 மணிக்கு அணையின் 4 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களும் இயக்கப்பட்டன. இதனால் பவானிஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. இதை மேட்டுப் பாளையம் தாசில்தார் புனிதா பார்வையிட்டார்.
இதையடுத்து தாசில்தார் புனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம் மற்றும் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு சென்று விடவும். வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக் கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story