மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Tuticorin via Sri Lanka Two people arrested for attempting to kidnap 104 kg of cannabis

தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேர் கைது அதிகாரிகள் நடவடிக்கை
தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கண்காணிப்பு 

தமிழக கடலோர பகுதிகளில் போதை பொருட்கள் கடத்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் சுங்கத்துறை தலைமை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். அதன்பேரில் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் 24 மணி நேரமும் 3 சுங்கத்துறை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து ஒரு காரில் தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வருவதாக சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ் தலைமையில் சூப்பிரண்டுகள் முனியசாமி, ராஜன், சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் தருவைகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்களை தீவிர தணிக்கை செய்யப்பட்டது.

104 கிலோ கஞ்சா 

அப்போது மதுரையில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்தனர். அந்த காரின் பின்பகுதியில் 4 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த மூட்டைகளில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மொத்தம் 104 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காரில் இருந்த மதுரை சிக்கந்தர்சாவடியை சேர்ந்த முத்து மகன் பாண்டி(வயது 31), காரை ஓட்டி வந்த நரிமேடு மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மருதையாபாண்டியன் மகன் ராஜாஜி(46) ஆகிய 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு... 

அந்த 2 பேரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள், கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆணையா ராஜ்குமா£ மோசஸ் கூறியதாவது:– ராஜாஜி, தனது நண்பரிடம் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக காரை வாடகைக்கு எடுத்து வந்து உள்ளார். காரில் பாண்டியுடன் சென்று மதுரையை சேர்ந்த அசோக் என்பவரை ராஜாஜி சந்தித்து உள்ளார். அவர் அந்த 2பேரிடமும் கஞ்சாவை கொடுத்து அனுப்பி வைத்து உள்ளார்.

அங்கிருந்து அவர்கள் கஞ்சாவை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து, கடல்வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் வந்தனர். தூத்துக்குடி அருகே வந்த போது சிக்கி கொண்டனர். மேலும் மதுரையை சேர்ந்த அசோக்கை தீவிரமாக தேடி வருகிறோம்.

இந்த வழக்கில் ஈடுபட்டு உள்ள 3 பேரும் புதிதாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. போதை பொருள் கடத்தலில் சமீபகாலமாக பலர் புதிதாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

சன்மானம் 


இது போன்று போதை பொருள் கடத்தல் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உதவி ஆணையரை 94434 71588 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். அவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் தைரியமாக எப்போது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் கடந்த ஆண்டு சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரூ.3¾ கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய், செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி கடற்கரை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடத்தலில் ஈடுபடுபவர்களை காபிபோசா சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.